3 அடி பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய ரவுடி புள்ளிங்கோ... அலேக்காக தூக்கிய போலீஸ்!!

 
Chennai

சென்னை கண்ணகி நகரில் பட்டா கத்தியினால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் சமூக வலைதளங்களில் சில இளைஞர்கள் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் காட்சி கடந்த இரு நாள்களாக வேகமாக பரவி வருகிறது. இதனை கண்ட போலீஸ் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சம்பவம் கடந்த 6-ம் தேதி கண்ணகி நகரில் நடைபெற்றது என்பது தெரியவந்தது.

இதையடுத்து கண்ணகி நகர்போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், கடந்த 6-ம் தேதி இரவு கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றதும், அப்போது சுனிலும், அவரது நண்பர்களும் கண்ணகி நகரில் பிரதான சாலை ஒன்றில் மொபெட்டின் மீது கேக்கை வைத்து 3 அடி நீள பட்டாக் கத்தியால் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார்  கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சுனில், அவரது நண்பர்களான அதேப் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார், அப்பு, தினேஷ், ராஜேஷ், கார்த்திக் ஆகிய 6 பேரை இன்று கைது செய்தனர்.

From around the web