கொட்டும் மழை... முதல்வர் ஸ்டாலினிடம் ஆசிர்வாதமும் அன்பளிப்பும் பெற்ற புதுமணத் தம்பதி!

 
CM-stalin-blessed-new-married-couple

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் புதுமண தம்பிகளை வாழ்த்தி பரிசு வழங்கினார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது.

வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இன்று இரண்டாவது நாளாக முதல்வர் ஆய்வு மேற்கொள்வதற்காக துறைமுகம், ராயபுரம், ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளுக்கு சென்றிருந்தார்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த முதல்வர், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாமையும் ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் பகுதியில் இருந்து மகாகவி பாரதியார் நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் சென்றுக் கொண்டிருந்தார்.

CM-stalin-blessed-new-married-couple

கவியரசு கண்ணதாசன் நகர் ஈபி சந்திப்பில் உள்ள துர்கா மஹால் எனும் திருமண மண்டபத்தில் கௌரி சங்கர் - மகாலட்சுமி தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து வெளியே வந்துக் கொண்டிருந்தனர். முதல்வர் செல்லும் வழியில் புதுமணத் தம்பதிகளைக் கண்டதும், அவர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனால், திருமணத்தன்று இன்ப அதிர்ச்சி அடைந்த மணமக்கள், முதல்வரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். யாருமே எதிர்பாராத இந்த திடீர் நிகழ்வினால், அங்கிருந்த அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அங்கு சுமார் 10 நிமிடங்கள் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தவர்களின் ஆசைக்கு இணங்க புகைப்படம் எடுத்துக்கொண்டு, தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார்.

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு எதிர்பாராமல் கிடைத்த இந்த மகிழ்ச்சி, திருமண வீட்டினரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. தங்கள் திருமணத்திற்கு எதிர்பாராதவிதமாக முதல்வர் நேரில் வந்து வாழ்த்துவார் என்று நினைத்துக் கூட பார்த்திராத தம்பதிகளின் மகிழ்ச்சியும் கரைபுரண்டோடியது.

From around the web