நெல்லையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம்!!

 
Nellai

நெல்லையில் நேற்று பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

நேற்று நெல்லை சந்திப்பு, டவுண், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தைக் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவால் தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகக் கூறித் திருநெல்வேலியில் அக்கட்சி தொண்டர்கள் பெயரில் நேற்று  பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.

அதிமுக மானூர் பகுதி தொண்டர்கள் என்கிற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களுடன்“அதிமுக கட்சி செயல்பாடுகளில் மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே. அவ்வாறு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப்போனோம். இனிமேலும் தொடர்ந்தால் தலைமைக் கழகத்தை முற்றுகையிடுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில், தமிழகத்தின் தனிப்பெரும் ஆளுமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி என அச்சிடப்பட்டுள்ளது.

From around the web