தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி; கண்காணிக்க குழு அமைப்பு; அரசாணை வெளியீடு!

 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி; கண்காணிக்க குழு அமைப்பு; அரசாணை வெளியீடு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆக்சிஜன் ஆலையை தற்காலிகமாக இயக்குவதற்கு அனுமதி அளித்தும், அதற்கான கண்காணிப்பு குழுவை நியமித்தும் அரசாணை பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதனடிப்படையில் தமிழக அரசு ஏப்ரல் 29-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது,

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 27-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் ஆலையை வரும் ஜூலை 31-ந் தேதி வரை தற்காலிகமாக இயக்க அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது.

அங்குள்ள ஆக்சிஜன் ஆலை தவிர வேறு எந்தவொரு ஆலையும் இயக்கப்படாமல் மூடப்பட்டு இருப்பதை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவு முழுமையாக செயல்படுவதை கண்காணிப்பதற்கான குழுவை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் அதற்கான குழுவை நியமித்து அரசு உத்தரவிடுகிறது.

6 பேர் கொண்ட அந்த குழுவின் தலைவராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செயல்படுவார். அந்த மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டு, தூத்துக்குடி சப்-கலெக்டர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தூத்துக்குடி அனல் மின்சார நிலையத்தின் (டான்ஜெட்கோ) துணைத் தலைமை வேதியியலாளர் ஜோசப் பெல்லாரிமின் ஆண்டன் சோரிஸ், உச்சநீதிமன்றம் உத்தரவின்படி நியமனம் செய்யப்படும் 2 சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள்.

இந்த கண்காணிப்புக் குழுவுக்கு சில அதிகாரங்கள் அளிக்கப்படுகின்றன. அதன்படி, இக்குழு பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில்தான் ஆக்சிஜன் ஆலையை வேதாந்தா நிறுவனம் மேலாண்மை செய்ய வேண்டும்.

அப்போது பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

உச்சநீதிமன்றம் உத்தரவை பின்பற்றி ஆக்சிஜன் ஆலை இயக்கப்படுகிறதா என்பதை இந்தக் குழு மேற்பார்வை செய்யும். ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் ஆலையின் மேலாண்மை ஆகியவற்றுக்கு மட்டும் எத்தனை பேர் அந்த ஆலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை இந்தக் குழு முடிவு செய்யும்.

ஆக்சிஜன் ஆலையை இயக்குவதில் ஏதாவது இயற்கை தொடர்பான குறைபாடுகளை அந்தப் பகுதியில் குடியிருப்போர் யாராவது கூறினால், அதை இந்தக் குழு கவனிக்க வேண்டும்.

ஆலையில் இயக்கத்தை தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு குறித்த ஆய்வை நடத்தி, அதை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கு கண்காணிப்புக் குழுவின் தலைவர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

From around the web