சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி மோசடி; வங்கி அதிகாரி உட்பட 9 பேர் கைது!

 
Chennai

சென்னையில் பண மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரி உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலையூர் ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நஜிமுதீன். இவர் பாரிமுனையில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இவர் போலி ஆவணங்களைக் கொண்டு 44 பேர் பெயர்களில் வங்கிக் கணக்கு துவங்கியுள்ளார்.

இந்த போலிக் கணக்கைக் கொண்டு 15 பேருக்கு 1.51 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் வழங்கியது போல மோசடி செய்துள்ளார். மேலும் இவருக்கு உடந்தையாக வண்டலூரைச் சேர்ந்த பிரித்விராஜ் செயல்பட்டு வந்துள்ளார்.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவேல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் ரைஸ் மில் துவங்குவதாகப் போலி ஆவணங்களைக் கொடுத்து 1.43 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

மேலும், வேளச்சேரியைச் சேர்ந்த மிராக்ளின் டோரிஸ் நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் 49 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக்கடன் வாங்கி மோசடி செய்துள்ளார்.

இதேபோன்று போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் வாங்கிக் கொடுத்ததாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் போலி ஆவணங்களைக் காட்டி கடன் பெற்றுப் பல கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web