அறிவாலயத்தை வென்றெடுத்த மு.க.ஸ்டாலின்! ஜார்ஜ் கோட்டையையும் வெல்வாரா?

தேர்தல் 2021 பொறுத்த வரை மிகவும் தாழ்த்தி மதிப்பிடப்பட்டு வரும்.தலைவர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தான்.இவரது மேடைப் பேச்சுகளையும், சிகை அலங்காரத்தையும்.மட்டுமின்றி இவரது பெயரையும் கூட மாற்றி அழைத்து இவரது இமேஜை சரிக்க எதிரணி கடும் முயற்சிகள் செய்து வருகிறது.
கலைஞரின் மகனாக இருப்பது இவருக்கு அரசியலில் எந்த அளவு கதவுகளைத் திறந்து விட்டதோ அதே அளவுக்கு சரி சமமான சவால்களையும் தந்திருக்கிறது.கலைஞரின் சொல்லாற்றலோ மொழி புலமையோ இவருக்கு கிடையாது. கலைஞரின் நகைச்சுவை உணர்வு மற்றும் பத்திரிக்கைப் பேட்டி சாமார்த்தியங்கள் இவருக்கு பெரிதாக கைகூடவில்லை.
ஸ்டாலின் அதிரடி அரசியல்வாதியும்.கிடையாது. நீண்டகாலம் சட்டமன்றத்தில் இருந்தாலும் இவர் நெருப்பு பேச்செல்லாம் எப்போதும் பேசியதில்லை.ஆனால், ஸ்டாலினிடம் கவனிக்க வேண்டிய ஒன்று, கலைஞர் மறைவுக்குப் பின் உடையும் என்று எதிர்பார்த்த திமுக என்ற பெரும் ஆலமரத்தைக் கட்டிக் காப்பாற்றி இருக்கிறார். அதன் மீது நடத்தப்பட்ட அதிகார தாக்குதல்களை லாவகமாக கையாண்டிருக்கிறார்.மத்திய மாநிலத்தில் எதிர் வரிசையில் இருந்து தம் கட்டி கட்சியை நடத்தி வருகிறார். 2019இல் திமுகவிற்கு பாராளுமன்றத்தில் பெரு வெற்றியை ஈட்டி தந்து இருக்கிறார்.
கடந்த பெரும் தொற்று காலத்திலும் தன்னை நோக்கி வீசப்படும் விமர்சனங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு களத்திற்கு சென்று மக்களை சந்தித்து வந்திருப்பது ஸ்டாலினின் பிளஸ்.பல வருடங்களாக ஸ்டாலினிடம் கவனிக்கத் தக்க் இன்னொரு விஷயம். அவரது அசாத்தியமான பொறுமை. தனக்கு வரும் எதிர்ப்புகளைக் களை எடுப்பதில் ஆகட்டும், தனக்கு வேண்டிய பொறுப்பைப் பெறுவதாகட்டும் ஸ்டாலின் வெகு பொறுமையான காத்திருத்தல் மூலம் தான் அடைந்திருக்கிறார்.
திமுக தலைவர் பதவிக்கு அவசரப்படாமல் பதட்டமின்றி காத்திருந்து காலம் கனியும் போது அதை பெற்று தக்க வைத்துக்கொண்டார். வைகோ போன்ற முன்னாள் எதிர்ப்பாளர்களையும் அரவணைப்பதன் மூலம் தன் அரசியல் முதிர்ச்சியையும் காட்டி வருகிறார்.தமையர் அழகிரியின் எதிர்ப்பை வெகு நேர்த்தியாக தாண்டி வந்திருக்கிறார். அதே சமயம் சகோதரி கனிமொழிக்கு எம்பி பதவி கொடுத்து கட்சியில் தனக்கு பக்கபலமாக வைத்துக் கொண்டிருக்கிறார். தன் மகன் உதயநிதிக்கும் எந்த போட்டியும் இன்றி இளவரசு பட்டம் கட்டிவிட்டிருக்கிறார்.
அறிவாலயத்தை தன் அரசியல் நுணுக்கத்தால் வென்று எடுத்த ஸ்டாலின் ஜார்ஜ் கோட்டையையும் வெல்ல முடியுமா என்பது அடுத்து சில நாட்களில் அவரது நகர்வுகள் தீர்மானிக்கும். கூட்டணி அமைப்பதில் தான் தமிழக தேர்தல்களின் முடிவுகள் பெரும்பாலும் முடிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றன.ஸ்டாலின் அந்த சூட்சமத்தை சரியாகப் புரிந்துக்கொண்டிருக்கிறாரா என்பதை இன்னும் சில நாட்களில் நாம் அறிந்து கொள்ளலாம்.
ஸ்டாலின் கலைஞரின் மகன் என்ற அடையாளத்தையும் தாண்டி தனக்கு என்று முத்திரை பதிக்க காலம் அவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கி இருக்கிறது. அதை எவ்வாறு பயன்படுத்தப் போகிறார் என்று தெரிந்துகொள்ள எல்லோரையும்.போல நாமும் ஆர்வமாக உள்ளோம்.
Stalin is shrewdly playing the Dark Horse role in this Election.
- தேவ்