தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மது விற்பனை!!

 
Tasmac

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரு. 217.96 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

அதன்படி தமிழ்நாட்டில் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசிய சேவைகளை தவிர பிற அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் ஆகியவை இன்று மூடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை என்பதால், நேற்றைய தினமே மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால் நேற்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரித்தது.

அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ. 217.96  கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.42.59 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.40.85 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.43.20 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.41.28 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web