குஷ்பு அடித்த பந்து.. திருப்பி வாங்கி ‘சிக்ஸர்’ அடித்த வாழப்பாடி மகன்!!

 
Kushboo-Stalin

உங்க கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறார்கள் என்பதற்காக இப்படியா? என்று குஷ்பு எழுப்பிய கேள்விக்கு, மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 5-ம் தேதி பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். பெரோஸ்பூர் அருகே விவசாயிகள் மறியல் போராட்டத்தால் அவரது கார் செல்ல முடியவில்லை. பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்து டெல்லி திரும்பினார்.

இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களால் சுமார் 15 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் மேம்பாலத்திலேயே நின்றிருந்தது. பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டதாக பஞ்சாப் அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பல சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ் தரப்பிலும், பஞ்சாப் மாநில அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டும் கூட, பாஜக அதை ஏற்க மறுக்கிறது. அத்துடன் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறது. அந்த வகையில், பாஜகவை சேர்ந்த குஷ்பு இது சம்பந்தமான கண்டனத்தை செய்தியாளர்கள் பேட்டியிலும், ட்விட்டிலும் பதிவு செய்திருந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “பஞ்சாபில் நிகழ்ந்ததை பார்க்கும்போது, இது நிச்சயமாக சதி என்றே தெரிகிறது. ஒரு நாட்டின் பிரதமர், மாநிலத்துக்குள் எந்த வழியாக வருகிறார், எப்படி வருகிறார், எந்த வழியாக போக போகிறார், என்றெல்லாம் எனக்கு தெரியாது என்று அம்மாநில முதலமைச்சர் சொல்கிறாரே.. அதெப்படி தெரியாமல் இருக்கும்? இது பொய் என்றே தெரிகிறது.. அவர் எல்லாருக்கும் பிரதமர்.. தமிழக முதல்வர் ஏன் ஒரு வார்த்தைகூட இதுவரை இதை பற்றி பேசாமல் இருக்கிறார்? ஏன் கண்டனம் சொல்லல? ஏன் கேள்வி எழுப்பல? உங்க கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறார்கள் என்பதற்காக இப்படியா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேபோலவே, தன்னுடைய ட்வீட்டில், பஞ்சாபில் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனமோ, கவலையோ தெரிவிக்காதது வித்தியாசமாக இருக்கிறது.மோடி உங்களுக்கு பிரதமர் இல்லையா.? அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினை என்பது நாட்டின் கவலை இல்லையா? அரசியல் அதிகாரமும், துவேஷமும் உங்களது கண்ணைக் கட்டிப் போட்டதால் கவலைப்படாமல் இருக்கிறீர்களா? என்று குஷ்பு கேட்டிருந்தார். இந்த ட்வீட்டுக்கு திமுகவினர் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம.சுகந்தனும் குஷ்புவின் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டிருக்கிறார்.

அதில், நம் பிரதமருக்கு உரிய பாதுகாப்பை வழங்க தவறிய உள்துறை அமைச்சரை நான் கண்டிக்கிறேன். பிரதமரை மட்டுமே பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் எஸ்பிஜி படையினருக்காக வருடந்தோறும் கோடிக்கணக்கில் செலவிடுகிறோமே. அப்படி இருக்கும்போது, அவருக்கு சரியான பாதுகாப்பு வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது. என்னுடைய இந்த கண்டனத்தில் குஷ்புவும் கலந்து கொண்டு, உள்துறை அமைச்சரவைக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

From around the web