நீதிபதியின் வாகனத்தை மறித்தது போல.. முதல்வர், அமைச்சர்கள் காரை போலீசார் மறிப்பபர்களா.? நீதிபதி காட்டம்

 
Anand-Venkatesh

முதல்வர் மற்றும் பிற அமைச்சர்களை போலீசார் எப்படி நடத்துகின்றனரோ, அதுபோலவே நீதிபதிகளையும் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 96-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவாலியேவின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முதல்வசர் வருகையையொட்டி, அடையாறு பகுதியில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்தனர். அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேசின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதனால் நீதிமன்றத்துக்கு அவர் வர காலதாமதமானது.

இதுதொடர்பாக, கண்டனம் தெரிவித்த நீதிபதி, தமிழ்நாடு உள்துறை செயலாளர் காணொளி வாயிலாக பிற்பகலில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Chennai

அதையடுத்து பிற்பகல் 2.15 மணிக்கு தமிழ்நாடு உள்துறை செயலாளர் பிரபாகர் உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் ஆஜரானார். போக்குவரத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமிழ்நாடு உள்துறை செயலாளரிடம் பல கேள்விகளை எழுப்பினார்.

இந்த நிகழ்ச்சி குறித்து காலை 9.30 மணிக்குத்தான் தகவல் தெரியவந்தது. அதையடுத்து. உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை தொடர்புகொண்டு, காலையில் உயர்நீதிமன்றத்துக்கு செல்லும்போது வாகனத்தை நிறுத்தவேண்டாம் என உதவியாளர் மூலம் தகவல் தெரிவித்துவிட்டேன். இந்த நிலையில் என்னுடைய கார் மறிக்கப்பட்டது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இரும்பு தடுப்புகள் பலவற்றை வைத்து சாலை மறிக்கப்பட்டிருந்தது. இதனால் 25 நிமிடங்கள் காலதாமதமாக உயர்நீதிமன்றத்துக்கு வந்தேன். பொது ஊழியரான என்னை பணி செய்யவிடாமல் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

ஒரு நீதிபதியின் வாகனத்தை மறித்தது போல, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் காரை போலீசார் மறிப்பபர்களா? ஏற்கனவே தகவல் தெரிவித்தும் உயர்நீதிமன்ற நீதிபதியின் காரை தடுத்த இந்தச் செயல், நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். இதற்காக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அதை நான் விரும்பவில்லை.

Chennai

உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் பலத்தைக் காட்ட உங்களை ஆஜராக சொல்லவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக யார் மீதும் குற்றம்சாட்டவும் விரும்பவில்லை. இதுபோன்ற செயல் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதற்கான ஒரு செய்தியாகவே இதை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

முதல்வர் மற்றும் பிற அமைச்சர்களை போலீசார் எப்படி நடத்துகின்றனரோ, அதுபோலவே நீதிபதிகளையும் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.

நீதிபதியின் கேள்விகளை உள்வாங்கிக் கொண்ட உள்துறை செயலாளர் பிரபாகர், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனருடன் கலந்தாலோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்று உறுதி அளிப்பதாகவும் தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் உறுதியளித்தார்.

From around the web