திமுகவை குறை சொல்வது சரிதானா? 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் காங்கிரஸுக்கு புத்துணர்ச்சி!

 
திமுகவை குறை சொல்வது சரிதானா? 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் காங்கிரஸுக்கு புத்துணர்ச்சி!

தமிழ்நாட்டில் 9 எம் பி க்கள் கொண்ட காங்கிரஸ்  54 எம் எல் ஏ தொகுதிகளை கேட்டது ஏட்டளவில் சரியே.ஆனால் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு  திமுக 25  தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. காங்கிரஸ் விசுவாசிகளுக்கு இது ஆத்திரத்தை தூண்டியது.  இதற்கு திமுகவை குறை சொல்ல முடியாது என்கிறார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். 1969 இல் காங்கிரஸ் பிளவுண்ட காலம் முதல் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நிரந்தர விசுவாசி இவர்.

“2011 சட்டமன்றத் தேர்தலில் நின்ற 63 தொகுதிகளில் 5 இல்  மட்டும் வென்றது காங்கிரஸ். அதுபோல 2016 தேர்தலில் ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில் 8 இல் மட்டுமே வென்றது காங்கிரஸ்.  எனவே திமுக 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியது என குறை சொல்ல முடியாது. இந்த 25 தொகுதிகளையும்  காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும்.

அப்போது தான் கட்சியினருக்கு உற்சாகம் பிறக்கும்.இந்த இலக்கை  அடைய கட்சி காலவரையறையுடன் திட்டமிட வேண்டும்.நிகழ்ச்சிநிரல் தெளிவாக உள்ளது.அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும், பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க கூடாது.தமிழர்களின் பெருமை, திராவிட கலாச்சாரத்தை மீட்டெடுக்க திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்.தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்,” என சிதம்பரம் பேசியுள்ளார்.

இன்று காங்கிரஸ் எம்பி க்களாக உள்ள 9 பேர் தலா 3 தொகுதிகளை தத்து எடுத்து அங்கு நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.  50  ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இவற்றை அனுபவிக்காத  காங்கிரஸ் தொண்டர்களிடம் நிதிவசதி இல்லை. 2004 -2014  பத்து ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது , தமிழ்நாட்டில் கட்சி கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நடவடிக்கை இல்லை.

பதவியில் இருந்த காங்கிரஸ் பிரமுகர்கள் தொண்டர்களிடம் தொடர்பு வைக்கவில்லை. அண்மைக்காலமாக பூத் கமிட்டி, மண்டல கமிட்டி என்று கட்சி அமைப்பு எழுந்து வருகிறது.  சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள்  25 தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாக பேசி வேண்டிய வசதிகளையம் உறுதிப்படுத்தினால்  நிச்சயம் வெற்றி பெறமுடியும். கள நிலவரத்தையும் கண்கூடாக அறிய முடியும்.

-வி.எச்.கே.ஹரிஹரன்

A1TamilNews