தமிழில் “ஆத்தா” என்பது கெட்ட வார்த்தையா?
“ஆத்தா நான் பாசாயிட்டேன்” என்ற ஒரு வரி வசனம் தமிழ்நாட்டையே கிறுக்குப் பிடிக்க வைத்து இருந்தது. பாரதிராஜா முதன் முதலாக இயக்கிய 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அறிமுகக் காட்சியில் அவர் சொல்லும் வசனம் தான் அது. 10 வகுப்பு பாஸ் பண்ணின கதாநாயகியை அறிமுகப்படுத்தும் வகையில், பாரதிராஜாவின் இயக்கத்தில் பி.கலைமணி வசனம் எழுதியிருந்தார். 16 வயதினிலே படத்தின் ஒலிச்சித்திரம் தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டிகளிலெல்லாம் இசைத்தட்டுகளாக பல வருடங்கள் கல்யாண வீடுகளிலும் வானொலியிலும் ஒலிபரப்பானது. ஆத்தா நான் பாசாயிட்டேன் என்று கேட்டாலே 16 வயதினிலே ஒலிச்சித்திரம் என்ற அடையாள வாக்கியமாகிப் போனது.
நடிகர் பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் “ஆத்தா உன் கோவிலிலே” என்ற பாடலும் பிரபலமானது. அதே பெயரில் ஒரு படமும் பின்னர் வெளியானது. இவ்வளவு ஏன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ”செல்லாத்தா, செல்ல மாரியாத்தா” பக்திப் பாடலை இன்னமும் தினமும் கோவில்களில் கேட்கலாமே!
இப்ப அதுக்கென்ன என்கிறீர்களா? “ஆத்தா மாதிரியே ஊழல்” என்று குறிப்பிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டேக் செய்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளான நேற்று, திமுக துணைப் பொதுச் செயலாளாரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ட்வீட் செய்திருந்தார்.
ஆ.ராசாவின் இந்தப் பதிவுக்கு அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் என்பவர், “ இப்படி ஒரு வார்த்தை நடையா? அதுவும் இறந்து போன ஒருவரைப்பற்றி. அவருடைய நினைவு நாளில் இது நல்லாவே இல்லை” என்று ட்வீட் செய்திருந்தார். சுமந்த் ராமனுக்கு பதிலளித்துள்ள திவ்யா ஸ்ரீனிவாசன் என்பவர், “ ஆத்தா னா அம்மான்னு அர்த்தம். ஆத்தான்னு சொல்றது ஒன்னும் பெரிய தப்பு இல்லே” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு புறம் நடிகை கஸ்தூரி, ஆ.ராசாவின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளார். அதில், “ என்ன ஒரு அழகான எழுத்து நடை. பெண்களின் வாக்குகள் நிச்சயமாக அள்ளிக் கொண்டு போகும்” என்று நக்கலாக கூறியுள்ளார். நடிகை கஸ்தூரியின் ட்வீட்டுடன் அவர் முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாட்டை விமர்சித்து எழுதியிருந்த ட்வீட்டை இணைத்து கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிசன்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பற்றி நடிகை கஸ்தூரி ,”என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க” என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா ஒரு விளக்கம் கொடுத்துள்ளார், “ ஆத்தா என்பது ஏதோ அவச் சொல் என்பது போல ஒரு க்ரூப் கம்பு சுத்தித் திரிகிறது.

எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களை “ஆயி” என்று அழைப்போம். அம்மா என்று அர்த்தம். இன்றைக்கும் என் இரண்டு பெண் குழந்தைகளிடமும் “ஏய் யாயி அந்த பேனாவை எடு” ,”ஏய் யாயி அந்த தலவாணி(தலையணை) எடு” என்று தான் கேட்கிறேன்.
ஒரு மாவட்டத்தில் “ஆயி” என பெண்களை அம்மா என்ற பொருளில் பாசமாக அழைக்கும் சொல் சில மாவட்டங்களில் கழிவை குறிக்கும் சொல்லாக இருக்கிறது. உங்களுக்கு தெரிந்தது மட்டுமே தமிழ் அல்ல. உணருங்கள்” என்று அப்துல்லா கூறியுள்ளார்.
16 வயதினிலே படத்தில் ”ஆத்தா வையும் காசு கொடு” என்று வசனம் பேசிய கமல் ஹாசனும், அதைக் கேட்ட ரஜினிகாந்தும் என்ன சொல்வார்கள்? சுமந்த் ராமனையும் கஸ்தூரியையும் 16 வயதினிலே படம் பார்க்கச் சொல்வார்களோ?
