அவர்கள் போட்ட பிச்சை உயிரால என்னால வாழ முடியாது.. ரயில் முன்பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவர்!!

 
college-student-killed-in-train-accident

குமாரின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து, அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள 2 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி மோதல் சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கம். பஸ் வழித்தடங்களில் சென்னையில் பல முறை இவர்கள் மோதலில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த 2 கல்லூரிகளிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பல மாணவர்கள் படித்து வருகிறார்கள். திருநின்றவூர், ஆவடி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பலர் தினமும் காலையில் ஒன்றாக கூடி ரயில் பயணம் மேற்கொண்டு கல்லூரிக்கு வருவது வழக்கம்.

அப்போது பரம எதிரிகள் போல 2 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் அடிக்கடி ரயில் பயணத்தின்போது மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள குருவராஜ பேட்டையை சேர்ந்த குமார் என்ற வாலிபர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கல்லூரியில் முதுகலை படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுவிட்டு மின்சார ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

திருநின்றவூர் அருகே வரும்போது இன்னொரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் குமாரை கேலி, கிண்டல் செய்துள்ளனர். 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாக சூழ்ந்து கொண்டு, ‘தனியாக வந்து மாட்டிக்கொண்டாயா? உயிர் பிச்சை போடுகிறோம். ஓடிவிடு’ என்று எச்சரித்து குமாரை அனுப்பியதாக தெரிகிறது. இதனால் மாணவர் குமார் மனமுடைந்தார்.

இதையடுத்து திருநின்றவூரில் ரயிலில் இருந்து கீழே இறங்கிய அவர் அந்த வழியாக சென்ற இன்னொரு ரயில் முன்பு பாய்ந்து திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு முன்பு தனது கல்லூரி நண்பர்களுக்கு செல்போனில் பேசி ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் அவர் அனுப்பி இருக்கிறார். அதில் அவர் பேசி இருக்கும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

குறிப்பிட்ட கல்லூரியின் பெயரை சொல்லி, ‘அவர்கள் போட்ட பிச்சை உயிரால என்னால வாழ முடியாது மச்சான்... நான் செத்துடுறேன் மச்சான்... என்னை தப்பா நினைச்சிக்காதீங்க...

என்னோட அப்பா, அம்மா யாருமே என்னை தப்பா நினைச்சிக்காதீங்க... அவங்க போட்ட பிச்சை உயிரால என்னால வாழ முடியாது’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆடியோவின் முடிவில் மின்சார ரயிலின் ஹாரன் சத்தம் கேட்கிறது. இதன் மூலம் ஆடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டு உடனடியாக ரயில் முன் பாய்ந்து மாணவர் குமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் ரயில்வே போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குமார் தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிந்ததும் அவருடன் படித்து வரும் சென்னை கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். குமாரின் தற்கொலைக்கு காரணமான சம்பந்தபட்ட கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினார்கள். இதன் காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

மாணவர்கள் அதிகளவில் மருத்துவமனையில் திரண்டுள்ளதால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். திருவள்ளூர் டி.எஸ்.பி.சந்திரதாசன் தலைமையில், டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குமாரின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து, அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நிலவும் பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web