ஜெ.ஜெயலலிதா என்னும் நான்! ஒரு சகாப்தம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் 2016-ம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார். இவரின், நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர்; நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்தார் ஜெயலலிதா. இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சுமார் 75 நாள் அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி இரவு காலமானார்.
மக்களால் நான்.. மக்களுக்காக நான் என்று முழங்கிய இரும்பு பெண்மணி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று நான்காம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.அவரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துக்கொள்ளுவோம்.
ஜெயலலிதாவின் இயர்பெயர் கோமளவல்லி ஜெயராம். இவர் 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாகவும், அரசியல் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் - வேதவல்லி பெற்றோருக்கு மகளாக ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் மறைந்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த அவரது அன்னை வேதவல்லி என்ற தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர்கள் பெங்களூரில் வசித்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார்.
பிறகு சென்னைக்கு வந்த அவர்கள் 1958-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் 10-ம் வகுப்பு படித்தார். அதன்பிறகு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்தது. அதே சமயம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே தனது படிப்பை கைவிட்டு நடிகையானார்.
ஜெயலலிதா பற்றி அவரது தயார் “சிறு குழந்தையாக இருக்கும் போதே எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமையைப் பெற்றிருந்தாள். படிப்பில் முகவும் கெட்டிக்காரி. ஆங்கில மொழியை நன்கு அறிந்து சரளமாகப் பேசுக் கூடியவர்” என்று கூறியுள்ளார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971-ம் ஆண்டு காலமானார்.

15 வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் துவங்கிய ஜெயலலிதா,மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். 1964-ல் “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம் மூலம் திரை உலகில் நுழைந்தார். இப்படம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். இதில், எம்.ஜி.ஆர்-வுடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார்.
குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார். இவரின் 100-வது படமான “திருமாங்கல்யம்” 1977-ல் வெளிவந்தது. ஜெயலலிதாவின் 100 ஆவது படத்தைப் பாராட்டிய அப்போதைய முதல்வர் கருணாநிதி “நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்” என்று பாராட்டி பேசியது சரித்திரம். அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்ட அவர் அரசியலில் சேரும் முன் தனது கடைசி படம் 1980-ல் வெளியானது.

1980-ம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், அ.இ.அ.தி.மு.க. கட்சியின் பிரச்சார செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார். இதையடுத்து, 1983-ல் அவரை அதிமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்து அழகுபார்த்தார் எம்.ஜி.ஆர். 1984-ல் மாநிலங்களவைக்கு தேர்வானதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.

பின்னர், 1989 சட்டப் பேரவை தேர்தலில் போடிநாயக்கர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறை எம்.எல்.ஏ- ஆனார். அத்துடன், தமிழக சட்டப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். இதையடுத்து, 1991-ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கவே, முதல்முறை முதலமைச்சராக பதவியேற்றார்.
முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொந்து குவித்ததாக கூறி, 1996 ஜூன் 14-ல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதுவே, அவரின் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் சறுக்கலையும், சிக்கலையும் ஏற்படுத்தியது. இருப்பினும், தொடர்ந்து தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக விளங்கினார். 2014 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 38-ல் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக செயல்பட்டது.
மேலும், 2016- சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றிபெற்று, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைத்து சாதனை படைத்தது. அத்துடன், 6-வது முறை முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார் ஜெயலலிதா.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் மேற்கொண்ட பணிகளை பலரும் பாராட்டக்கூடிய அளவிற்கு செய்து முடிப்பவர். அவர் வாழ்கையில் பெற்றுள்ள விருதுகளை பற்றித் தெரிந்துக்கொளுங்கள்.
‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” பெற்றுக்கொடுத்தது.
‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற தெலுங்கு படம் சிறந்த தெலுங்கு நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” அவருக்கு பெற்றுக்கொடுத்தது.
‘சூர்யகாந்தி’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” பெற்றுக்கொடுத்தது.
‘கலைமாமணி’ விருது தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கி இவரை கௌரவித்தது.
‘கவுரவ டாக்டர் பட்டம்’ இலக்கியத்தில் சென்னை பல்கலைக்கழகம் மூலமாக பெற்றார்.
‘கவுரவ டாக்டர் பட்டம்’ தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான அவருக்கு வழங்கியது.
‘கவுரவ டாக்டர் பட்டம்’ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்காக அவருக்கு கிடைத்தது.
‘கவுரவ டாக்டர் பட்டம்’ தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மூலம் சட்டத்திற்கான அவருக்கு வழங்கியது.
‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டம்’ பாரதிதாசன் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கியது.
‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டம்’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கியது.
