முடிந்தது ஹனிமூன்! “ஐபேக்” பிரஷாந்த் கிஷோரை கை கழுவுகிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

 
Prashanth Kumar

திமுக கூட்டணியின் தேர்தல் வியூகத்தை வடிவமைத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திடமிருந்து திமுக விலகப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கலைஞர் கருணாநித் இல்லாத முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதாலும், 4 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஓரளவு செல்வாக்கு ஏற்பட்டது போல் இருந்ததாலும் கடும் உழைப்புக்குத் தயாரான மு.க.ஸ்டாலின், ஐபேக் நிறுவனத்தின் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டார்.

அடுத்தடுத்த தேர்தல்களிலும் ஐபேக் நிறுவனத்துடன் திமுக கூட்டணி தொடர்ந்து செயல்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சொந்தமாகவே திமுக தரப்பில் ஒரு தேர்தல் ஆய்வு  நிறுவனம் தொடங்கப் போவதாகவும் கூறப்படுகிறது. ஐபேக் நிறுவனத்தை திமுகவுக்கு அறிமுகப்படுத்தி ஒப்பந்தம் போட்டது முதலமைச்சரின் மருமகன் சபரீசன் தான் என்று பரவலாகப் பேசப்பட்டது. தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் தற்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு மன வருத்தம் என்றெல்லாம் கூட கூறப்பட்டது.

ஐபேக் பிரஷாந்த் கிஷோருடனான விரிசலுக்கு, அவருடைய தேசிய அரசியல் பார்வை தான் காரணம் என்றும் கருதப்படுகிறது. காங்கிரஸைத் தவிர்த்து மம்தா பானர்ஜி தலைமையில் மூன்றாவது அணி அமைக்க பிரஷாந்த் கிஷோர் வெளிப்படையாகவே முயற்சி செய்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சந்தித்து இது தொடர்பாகப் பேசவும் செய்தார். ஆனால் சரத்பவார் காங்கிரஸ் இல்லாத அணி சாத்தியமே இல்லை என்று பளிச்சென்று நேரடியாகவே சொல்லிவிட்டார்.

எந்த சம்மந்தமும் தொடர்பும் இல்லாத மம்தா பானர்ஜியின் கட்சிக்கு கோவா மாநிலத்தில் பிரச்சாரம் செய்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் அந்தக் கட்சியை வளர்த்தெடுக்கவும் முயற்சி எடுத்துள்ளார் பிரஷாந்த் கிஷோர். அரவிந்த கேஜ்ரிவால், நவீன் பட்நாயக், அகிலேஷ் யாதவ், கே,சந்திரசேகர ராவ், ஜெகன் ரெட்டி போன்ற காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத தலைவர்களை மம்தா பானர்ஜி தலைமையில் ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிய்ல் பிரஷாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது பாஜகவுக்குத் தான் சாதகமாக முடியும் என்று உணர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு முடிவுகட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை அவருடைய வீட்டிலேயே சந்தித்துப் பேசியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தான்  நிலையான ஆட்சியைத் தர முடியும் என்று அவரிடம் ஸ்டாலின் எடுத்துரைத்து, அவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக அணியில் சேர்வதற்கு சம்மதம் பெற்று விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று பேசியுள்ளனர்.

அதே போல் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக்குடனும், முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பில் உள்ளாராம். பாஜவுடன் நேருக்கு நேராக மோதும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் என்று காங்கிரஸ் கட்சிக்கும் அட்வைஸ் செய்துள்ளாராம் ஸ்டாலின். இந்நிலையில் மம்தா பானர்ஜி தலைமையில் மூன்றாவது அணி அமைக்கத்துடிக்கும் பிரஷாந்த் கிஷோரிடம் இனியும் இணைந்து செயல் பட முடியாது என்பதால், அவருடைய நிறுவனத்துடனான ஒப்பந்தந்தை முறித்துக் கொள்ள தயாராகிவிட்டாராம் முதலமைச்சர்.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

From around the web