ஜிஎஸ்டி எல்லாமே உங்க ஆட்சியில் கொண்டு வந்ததுதான்; ஓபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி

 
Senthil-Balaji

மாதாந்திர கணக்கெடுப்பு நிறைவேற்றப்படும் எனவும், மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கரூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “கரூர் மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி தொடங்கப்படும் என கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான மண்டபத்தில் தற்காலிகமாக கல்லூரி அமைக்கப்பட்டு உள்ளது.

மின் நுகர்வோர்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். ஜிஎஸ்டி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்தநிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி அப்போதைய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில் விண்ணப்ப கட்டணம். மின் அளவைக்கான வாடகை, உபகரணங்களுக்கான சோதனை கட்டணம், இதர பணிகளுக்காக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட வேண்டுமா? என ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி கேட்டு அவர்களுடைய கடிதத்தின் அடிப்படையில் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இதர பணிகளுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதனை அவர் மறைத்து விட்டு புதிதாக இப்போது ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது போல் மாய தோற்றத்தை உருவாக்கி அறிக்கையை வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே அவர்கள் ஆட்சியில் இருந்த நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது. மின்சாரத்தை பொறுத்தவரை நுகர்வோருக்கு மின்கட்டணத்தில் எந்தவிதமான ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுவது இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த மின்மாற்றிகளுக்கு டி.டி. மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்பு கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் வெளியிடப்பட்டது. அதற்கான பணிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. மின்மாற்றிகளில் டி.டி.மீட்டர் பொருத்தும் போது மின் இழப்புகள் கண்டறியப்பட்டு அதை தவிர்க்க முடியும். இவ்வாறு மின்மாற்றியில் டி.டி. மீட்டர் பொருத்தப்பட்ட பின் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தொடங்கப்படும்.

மின்மாற்றியில் டி.டி. மீட்டர் பொருத்தியவுடன் ஓவர்லோடு மற்றும் குறைந்த மின் அழுத்தம் இருந்தாலும் லைன் அறுபட்டு இருந்தாலும் மின்மாற்றி தானாக ஆப் ஆகி விடும். இப்பணிகள் முடிவுற்ற பிறகு வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதின் மூலம் வீட்டில் ஏதேனும் பாதிப்பு என்றால் கண்காணிப்பு அறையில் இருந்தே இயக்கிட முடியும்.

மின்வாரியத்தில் 1.46 லட்சம் பணியிடம் உள்ளது. இதில், 3-ல் 1 பங்கு பணியிடம் காலியாக உள்ளன. இதில் மின்கணக்கெடுக்க செல்லக்கூடிய பணியாளர்களும் குறைந்த அளவிலேயே உள்ளனர். மாதாந்திர கணக்கீடு என வரும்போது இருமடங்கு கணக்கெடுக்கும் பணியாளர்கள் தேவை. எனவே மாதாந்திர கணக்கெடுப்பு என்ற வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும்.” என்று கூறினார்.

From around the web