நீட் தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை

 
DPI

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதேசமயம் நீட் தேர்வு பாதிப்பு குறித்து குழு அமைக்க தமிழ்நாடு அரசிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் எனவே கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இன்னும் ஒன்றிய அரசு ஒப்புதல் தெரிவிக்காத நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை ஒன்றிணைத்து பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடைமுறையை பின்பற்றி ஆகஸ்டு இறுதிக்குள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பத்தில் சில மாணவர்கள் தவறு செய்வதால், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெற்றோர்கள் உதவி இல்லாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருப்பதால் இதனைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களின் ஒரு தேர்வு விண்ணப்பம் கூட ரத்தாகி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இருக்கிறது. எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கியுள்ளது.

நீட் தேர்வுக்கு ஜூலை 16 முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடந்து வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

From around the web