பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தடை - தமிழ்நாடு அரசு உத்தரவு

 
Vinayagar

விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்தநிலையில், இன்று 20 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவானது. கேரளாவில் ஓணம், பக்ரீத் பண்டிகைகளை முன்னிட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதே தொற்று அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதேபோல், வரும் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் ஒன்றிய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து பண்டிகை காலத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இருந்த போதிலும் தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் சந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு செயல்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் இல்லங்களில் வைத்து வழிபாடு நடத்திய சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் , அவற்றை இந்து சமய அறநிலையத்துறை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை மற்றும் நாகை வெளாங்கண்ணியில் கொண்டாடப்பட உள்ள மரியன்னையின் பிறந்தநாள் திருவிழாவின் போது, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

From around the web