நெசவாளர்களுக்கு நற்செய்தி; அறிவித்தார் அமைச்சர் காந்தி..!

 
Handloom-Workers

கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயர்த்தப்படும் என, சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதன் கொள்கை விளக்கக் குறிப்பை வெளியிட்டு, துறையின் அமைச்சர் காந்தி பேசியதாவது;

“தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கு 2015ம் ஆண்டுக்குப் பின்னர் அடிப்படை கூலி உயர்வு வழங்கப்படவில்லை.

Minister-Gandhi

இதை கருத்தில் கொண்டும், நெசவாளர்களின் வருவாயை அதிகரித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டும், கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படைக் கூலியில் 10 சதவீதம் உயர்வும், அகவிலைப்படியில் 10 சதவீதம் உயர்வும் வழங்கப்படும். இதன் மூலம், சுமார் 1 லட்சம் நெசவாளர்கள் பயன்பெறுவர்.

கைத்தறி வேட்டி, சேலை ரகங்களுக்கு நெசவுக்கு முந்தைய பணிக்கான கூலி உயர்த்தப்படும். கதர், பாலிஸ்திரா ரகங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக 20 லட்சம் ரூபாய் செலவில் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படும்.

Handloom-Worker

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் 6 கோடி ரூபாய் செலவில் சாயக் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையமும், 5 கோடி ரூபாய் மதிப்பில் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் குறித்த கைத்தறி அருங்காட்சியமும் அமைக்கப்படும்.

கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்விற்காக ‘ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும். 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும்” என்றார்.

From around the web