குப்பையோடு குப்பையாக நெல்மணிகள்: கொள்முதல் செய்ய கோரிக்கை..!

 
Tanjore

தஞ்சையில், இடம் இல்லாத காரணத்தால் குப்பை கொட்டும் இடங்களில் நெல்மணிகளை கொட்டி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாரியம்மன் கோவில், பூண்டி, ஒரத்தநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள் சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

Tanjore

இதனிடையே, மாரியம்மன் கோவில் பகுதி சாலையோரத்தில் நெல்மணிகளை கொட்டிவைக்கக் கூடாது என கூறப்பட்டது. இதனால் செய்வதறியாது திகைத்த விவசாயிகள், குப்பை கொட்டும் இடங்களில் நெல்மணிகளை கொட்டி வைத்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தார்ப்பாய் கொண்டு மூடி அவைகளை பாதுகாத்து வரும் விவசாயிகள், குப்பைகளில் சுற்றி திரியும் பன்றிகளிடம் இருந்து நெல்மணிகளை காப்பாற்ற, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காவல் காத்து வருகின்றனர்.

Tanjore

மழை பெய்யும்போது தார்ப்பாய் உள்ளே அமர்ந்து காவல் காக்கும் விவசாயிகள் சற்று கண்ணயரும் வேளையில் பன்றிகள் தார்ப்பாயை கிழித்து நெல்மணிகளை நாசம் செய்து வருகின்றன. எனவே, சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web