வேகமாக பரவும் ஒமைக்ரான்; தடுப்பு பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை

 
CM-Stalin

ஒமைக்ரான் தடுப்பு பணிகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் பரவலும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன்படி, 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வரும் 10-ம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.

மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு களமிறங்கியுள்ளது. அதன்படி, ஒமைக்ரான் தடுப்பு பணிகள் தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறையை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web