ஆன்லைன் மூலம் கோவில் இடவாடகையை செலுத்தும் வசதி; அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்

 
Sekar-babu

கோவில் இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் ஆன்லைன் வழியே வாடகை செலுத்தலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தில், தமிழ்நாட்டில் கோவில் இடத்திற்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் வசதியை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்துள்ளார்.

இதன்பின், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “கோவில் இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம். இணையவழி வாடகை மூலம், எவ்வளவு வாடகை பெறப்படுகிறது என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம். நேரடியாக வாடகை செலுத்துவோரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

Sekarbabu-innagurates-online-service

தமிழ்நாட்டில் அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்க வேண்டும் என பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தது குறித்து பேசிய அவர், மற்ற நாட்களில் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தால் அதனை அரசின் கவனத்துக்கு கொண்டு வரலாம்.

அது நிச்சயம் சரிசெய்யப்படும். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தான் வார இறுதி நாட்களில் கோவில் மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் தெய்வங்களுக்கு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றன. அதில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா பயம் நீங்கியவுடன் முதல் நடவடிக்கையாக கோவில்கள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.

From around the web