திமுகவின் சித்தாந்தத்தை எங்களது பூஜை அறைக்கும் கோவில்களுக்கும் கொண்டு வராதீர்கள் - அண்ணாமலை பேச்சு

 
Annamalai

திமுகவின் சித்தாந்தத்தை எங்களது பூஜை அறைக்கும் கோவில்களுக்கும் கொண்டு வராதீர்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மக்களிடையே நோய் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூட உத்தரவிட்டது. மேலும் முக்கிய விழா நாள்களிலும் கோவில்கள் திறப்புக்கு அனுமதி இல்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் சிவகாமி பரமசிவம், வழக்குரைஞர் மனோகரன், நாமக்கல் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, சேலம் மாநகர் மாவட்ட பார்வையாளர் கோபிநாத், மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு, கல்வியாளர் பிரணவ்குமார் ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை பாரிமுனையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது,

இல்லாத கொரோனாவை காரணம் காட்டி கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை திறந்த நிலையில் கோவில்களை திறக்காதது ஏன்? தியேட்டரில் மட்டும் கொரோனா பரவாதா? திமுகவின் சித்தாந்தத்தை எங்களது பூஜை அறைக்கும் கோவில்களுக்கும் கொண்டு வராதீர்கள் என்றார்.

மேலும், 'மதத்தை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை' என்றும் கூறினார்.

கோவில்களை திறக்க வலியுறுத்தி பல்வேறு முழக்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

From around the web