ஸ்டெர்லைட் ஆக்சிஜன் விவகாரத்தில் பாஜக அரசு நெருக்கடி கொடுத்ததா?

 
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் விவகாரத்தில் பாஜக அரசு நெருக்கடி கொடுத்ததா?

அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவின் படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசின் முடிவை பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே திமுக மக்களை கைவிட்டு விட்டது என்ற குரல்கள் சமூகத்தளங்களில் ஓங்கி ஒலிக்கிறது/

இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்ட திராவிட சிந்தனையாளரும், அரசியல் விமர்சகரும், சட்டமன்றத் தேர்தலில் சூர்யா சேவியர் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். 

”ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் அனுமதிக்காத நிலையில், மராட்டிய மாநிலத்தில் தொடங்க உரிமம் அளித்தனர். இரத்தினகிரி மாவட்டத்தில் தொழிற்கூடம் கட்டி தொடங்க இருந்த நிலையில், அங்கே விவசாயிகள் திரண்டு வந்து உடைத்து நொறுக்கினர். அதனால், மராட்டிய அரசு உரிமத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

அதன்பிறகு, தமிழ்நாட்டுக்கு வந்து, அண்ணா தி.முக. அரசிடம் உரிமம் பெற்று, தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் தொடங்கினார்கள். ஆனால், காற்று, நீர் நிலம் அனைத்தையும் மாசுபடுத்தி, புற்று நோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தியதால், ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.

மதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழக்கு நடத்தி வந்தன. ஆலையை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் 2010 செப்டெம்பர் 28 தீர்ப்பு அளித்தது. அதன்பிறகு, ஸ்டெர்லைட் நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர். மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மீண்டும் வழக்கு, உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது.

ஆலையை மூடச் சொல்லி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன்படி மூடப்பட்டது. தற்போதும், ஆலையைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை. தடை ஆணை நீடிக்கின்றது. தற்போது கொரோனா மரணங்களும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டையும் பயன்படுத்திக் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியதும், அதற்கு ஆட்சேபணையில்லை என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்தச்சூழலில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதிக்கலாம் என்று அனைத்துக் கட்சிகளும் கூறியுள்ளது. பாஜகவும், வேதாந்தாவும் எடுத்த முடிவையும், தமிழக அரசியல் கட்சிகள் எடுத்துள்ள முடிவும் ஒன்றல்ல.

ஒட்டுமொத்த ஆக்சிஜன் தேவைக்கான கூட்டம் என்பதைவிட, ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான கூட்டமாகவே இது நடத்தப்பட்டுள்ளது என்ற விமர்சனம் இருக்கிறது. ஸ்டெர்லைட் தான் இப்போது பிரச்சனைக்குரியதாக இருப்பதால் அது சார்ந்த கூட்டமாக இருக்கிறது என்ற பதிலும் வருகிறது. மத்திய அரசும், வேதாந்தா நிறுவனமும், உச்சநீதிமன்றமும் சேர்ந்து, ஆக்சிஜன் தேவை என்ற கள்ளத்தனத்திலிருந்து ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு எடுத்த முயற்சியை அனைத்துக் கட்சிகளும் ஆக்சிஜன் மட்டுமே எடுக்க வேண்டும் என்று கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இந்த முடிவை தமிழக அரசியல் கட்சிகளை எடுக்க வைப்பதற்கு, மக்களின் ஆக்சிஜன் தேவையையும், மக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை தமிழகத்தின் மீது மத்திய அரசால் சுமத்தும் சூழலை தவிர்க்கும் நெருக்கடிக்கு ஆளானதிலிருந்தே இந்த முடிவை கட்சிகள் எடுத்துள்ளதாகவே கருத முடிகிறது. இந்த முடிவை கட்சிகள் எடுக்காவிட்டாலும், நீதிமன்றத்தின் மூலமாக திறக்கும் வாய்ப்பும் அங்கு உருவாகியே உள்ளது. அது பெரும் போராட்டத்தை சந்திக்கும் சூழலையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும். அதை தவிர்க்கும் நோக்கமும் இந்த முடிவுக்குள் அடங்கியிருக்கிறது.

இதை ஆரம்பத்திலேயே மத்திய பாஜக அரசு அனுமதிக்காமல் நீதிமன்றத்தில் மறுத்திருந்தால் இந்த தேவையே எழுந்திருக்காது. பாஜக கொடுத்த நெருக்கடிக்கு, இன்று தமிழக கட்சிகள் மக்கள் நலன் சார்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கிறார்கள். எந்த ஒரு விளக்கம் எப்படி கொடுத்தாலும், ஆக்சிஜன் போன்ற எந்தவொன்றிற்காகவும் ஸ்டெர்லைட் ஆலை வளாகம் திறக்கப்படுவது ஏற்புடைய செயல் அல்ல.

ஆலையை திறக்கும் விசயத்தில் தமிழக அரசியல் கட்சிகள் எடுத்துள்ள முடிவும், பாஜக மற்றும் வேதாந்தா எடுத்த முடிவும் ஒன்றல்ல. இதில் தமிழக அரசியல் கட்சிகளை விமர்சிப்பதற்கு  பாஜகவிற்கும், அதன் கூட்டத்திற்கும் எந்த தகுதியும் இல்லை,” என்று சூர்யா சேவியர் கூறியுள்ளார்.

From around the web