கடனை கட்டிட்டு செத்து போ.. விவசாயியை தற்கொலைக்கு தூண்டும் தனியார் பெண் அதிகாரி!!

 
female-officer-pushing-farmer-to-suicide-for-not-repaying-loan

கடன் வாங்கிய விவசாயி ஒருவரை மிரட்டி கடனை திரும்பச் செலுத்த வலியுறுத்தும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி, விவசாயியைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் பேசிய ஆடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரகோத்தமன். இவர் திருவெண்ணைநல்லூர் இந்தியன் வங்கியில் விவசாயக் கடனாக ரூ. 30 ஆயிரம் பெற்றுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் இவர் கடன் தவணையை முறையாகச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் கடன் தொகையைத் திரும்பப் பெற தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் விவசாய தற்கொலைக்குத் தூண்டும் விதமாகப் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விவசாயியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பெண் அதிகாரி ஒருவர், தான் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து கால் செய்வதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர், ‘நீங்கள் இந்தியன் பேங்கில் கடன் வாங்கி உள்ளீர்கள்... அதை எப்ப கட்டப் போகீறார்கள்’ என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த விவசாயி, ‘இந்தியன் பேங்கில் தான் நான் கடன் வாங்கினேன். நீங்கள் எதற்காக என்னைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்’ என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவரும் பேசிக் கொண்டிருக்க அது அப்படியே வாக்குவாதமாக முற்றியுள்ளது. உடனே அந்தப் பெண் அதிகாரி, ‘யோவ்... நீ கடன் வாங்கிட்டு போவ.. யார் வந்து கேப்பாங்க.. முதல் நீ ஃபேங்குக்கு வா.. சட்டம் எல்லாம் பேசதா’ என மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார்.

அதற்கு அந்த விவசாயி மீண்டும், ‘ஒரு விவசாயியை இதுபோல மரியாதை இல்லாமல் பேசலாமா? நான் கடன் வாங்கியது அரசிடம் இருந்து தானே, தவிர உங்களிடம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். அதற்கு அந்த பெண் ஊழியர், ‘அரசிடம் கடன் வாங்கினால் அதைச் செலுத்தக் கூடாது என்று இருக்கிறதா’ எனக் கேட்க, அப்படியே அந்த பேச்சு வாக்குவாதமாக முற்றியது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த பெண் அதிகாரி, ‘ஊர்க் கதையெல்லாம் பேச வேண்டாம். செத்தால் கூட கடனை கட்டிவிட்டுச் செத்து போங்கள்’ என்று கூறுகிறார். கடனை திரும்பப் பெறுவதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு விவசாயியைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் பெண் ஊழியர் பேசிய இந்த ஆடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தினால் விவசாயி ரகோத்தமன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பல கோடி கடன் பெற்று ஏமாற்றும் பெரு நிறுவனங்களையும் தொழிலதிபர்களையும் எந்த கேள்வியும் கேட்காமல் விவசாயிகளிடம் இதுபோல அடாவடியாகக் கடனை வசூல் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

From around the web