மு.க.ஸ்டாலினை சிக்கலில் மாட்டிவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!

 
மு.க.ஸ்டாலினை சிக்கலில் மாட்டிவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!

இன்னும் 5 நாட்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் விவகாரத்தில் திமுகவை இழுத்து விட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

13 உயிர்களை பலிவாங்கி இழுத்து மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஆலையின் நிர்வாகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டதால், தமிழ்நாடு அரசின் முடிவைக் கேட்டது உச்சநீதிமன்றம். 

நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினாலும் கொரோனாவினாலும் நாள்தோறும் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனித நேயமிக்க செயலாக கருதப்படுவதால், இது தமிழக அரசை சிக்கலில் மாட்டி விட்டது. மக்கள் எதிர்ப்பை மீறி ஆலையை திறக்க முடியாது என்ற அரசின் கருத்தை ஏற்கவில்லை நீதிமன்றம்.

நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்னால் 8 கட்சிகளை அழைத்து கருத்துக் கேட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆக்சிஜனுக்கு மட்டும் தான் தற்காலிக அனுமதி, அரசு மின்சாரம் மட்டுமே உபயோகப்படுத்தனும், போராட்டக்குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்புடன் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும், இதைக் காரணம் காட்டி மீண்டும் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்களுடன் திமுக சார்பில் கருத்துகள் முன்  வைக்கப்பட்டது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பி, அரசே ஆலையை கையகப்படுத்தி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கேட்டுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மற்றொரு பக்கம் உயர்நீதிமன்றத்தில்,  தொழிற்சாலைக்கான ஆக்சிஜன் மட்டுமே இங்கே உற்பத்தி செய்ய முடியும். மருத்துவ ஆக்சிஜன் மிகக்குறைந்த அளவிலேயே தயாரிக்க முடியும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  அனுமதி கொடுத்து, மருத்துவ ஆக்சிஜனுக்கான ஏற்பாடுகளை செய்து உற்பத்தியை தொடங்குவதற்குள் கொரோனா இரண்டாவது அலை முடிந்து விட்டாலும் ஆச்சரியமில்லை.

இங்கே தான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் சாணக்கியத்தனம் இருக்கிறது. அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்தாமலேயே அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்திருக்க முடியும். ஆனால் திமுகவை அழைத்து, அவர்கள் வாயாலேயே ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜனுக்காக திறக்க அனுமதியுங்கள் என்று கூற வைத்தது, பொது மக்கள் மத்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை கனகச்சிதமாக நிறைவேற்றி விட்டார் எடப்பாடியார். இதிலிருந்து மீண்டு வந்து மக்கள் மத்தியில் எப்படி நற்பெயரைப் பெறுவார் மு.க.ஸ்டாலின் என்பதே அவருக்கான முதல் சோதனை!

From around the web