#BREAKING: கர்நாடகாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!!

 
Rajendra-Balaji

மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது செய்யபட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3.10 கோடி பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 17-ந் தேதி முதல் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

கோவை, மதுரை, தென்காசி, பெங்களூரூ மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அவரை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டு இருப்பதாக மாவட்ட போலீஸ் நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் சைபர் கிரைம் போலீசார் மூலம் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியை  தனிப்படை போலீசார் கர்நாடகவில் கைது செய்தனர்.


 

From around the web