8 ஆண்டுகளுக்கு பிறகு சகோதரர்களுடன் சேர்ந்த சிறுவன், சிறுமி

 
Madurai

மதுரை ரயில் நிலையம் அருகில் தொலைந்து போன தன் தம்பி மற்றும் தங்கையை 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சகோதரன் கண்டுபிடித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருச்சியை சேர்ந்த சண்முகம், பார்வதி தம்பதி கடந்த 2013-ம் ஆண்டு மதுரை வந்தபோது தனது 6 வயது மகள் மற்றும் 2 வயது மகனை தவறவிட்டதாக கூறப்படுகிறது.

சாலையில் தவித்த பெண் மற்றும் ஆண் குழந்தையை மீட்ட ரயில்வே போலீசார் காப்பகத்தில் சேர்த்ததாகவும், பெற்றோர் குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில் சிறுமியை திண்டுக்கல், காந்தி கிராமம் அடுத்துள்ள காப்பகத்திலும், 2 வயது சிறுவனை மதுரை காப்பகத்திலும் குழந்தைகள் நல அமைப்பினர் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.

8 ஆண்டுகள் கழித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் உடன் பிறந்த 3 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் தஞ்சாவூரில் இருந்து மதுரை வந்து, மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் சகோதரி, சகோதரன் குறித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், எங்களுடைய சகோதரன் மற்றும் சகோதரி என்றும், கடந்த 2013-ம் ஆண்டு மதுரையில் யாசகம் செய்த போது குழந்தைகள் நல குழுவினர் மீட்டு விட்டனர். தற்போது எங்களிடம் அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என கோரினர்.

இதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 2013-ம் ஆண்டில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்த போது, அந்த சிறுமி திண்டுக்கல் காந்தி கிராமத்தில் உள்ள காப்பகத்தில் தங்கி பள்ளியில் 9-ம் வகுப்பு படிப்பதும், சிறுவன் மதுரையில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 3 அண்ணன்கள், ஒரு அக்கா ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேற்று மதுரை வந்தனர். அவர்களிடம், அந்த சிறுமி மற்றும் சிறுவன் ஆகியோரை மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் பாண்டியராஜா, சண்முகம் ஆகியோர் இணைத்து வைத்தனர். மேலும் சிறுவன் மற்றும் சிறுமியின் எதிர்கால நலன் கருதி அந்தந்த இடங்களில் தங்க வைத்து படிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

8 வருடங்களுக்கு பிறகு தன் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுடன், சிறுவன் -சிறுமியை இணைத்து வைத்த குழந்தைகள் நல குழுவிற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

From around the web