முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி; மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்..!

 
CM-Stalin-starts-campaign-booster-vaccine

முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதத்துக்கும் மேல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் பூஸ்டர் ‘டோஸ்’ எனப்படும் 3-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையவர்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள ‘இமேஜ்’ கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 273 நாட்கள் (கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை) முடிந்தவர்களில் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையவர்கள் என 10 லட்சத்து 75 ஆயிரத்து 351 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்கள் வரும் 31-ந் தேதிக்குள் பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web