எள் முனையளவு கூட பாதிப்பில்லை - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

 
Vanathi-Srinivasan

நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது என்பது உண்மைக்கு புறம்பானது என வானதி சீனிவாசன் கூறினார்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, 19.9.2021 அன்று சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதற்கிடையே நீட் தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் 8-ந் தேதி  நடைபெறும் என்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து  நீட் விலக்கு சட்டம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து பாஜக பிரதிநிதி வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தீர்மானத்தில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை. ஒன்றிய அரசு, மாநிலங்கள் மீது நீட் தேர்வை திணித்திருப்பதாக தீர்மானத்தில் உள்ளது. ஆளும் கட்சியான திமுக கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போதே நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள்; அப்போதே எங்கள் கருத்துகளை முழுமையாக பேச முடியாததால் வெளிநடப்பு செய்தோம்.

நீட் தேர்வால் இடஒதுக்கீட்டை விட அதிகமாக இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்; ஆரம்ப கட்டத்தில் நீட் தேர்வினால் சில பிரச்னைகள் இருந்ததை மறுக்கவில்லை; மாணவர்கள் கஷ்டப்படுவதாக அவர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது.  நீட் தேர்வால் எள் முனையளவுக்கு கூட பாதிப்பில்லை. நீட்தேர்வு 10 மொழிகளில் நடைபெறுவதால் பலமாநில மாணவர்கள் பலனடைந்து உள்ளனர்” என்றார்.

From around the web