வானதி சீனிவாசன் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் மீது தாக்குதல்... ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள்..!

 
bjp

சென்னையில் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. அந்த வகையில் பாஜக சார்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். மேலும் 200-க்கும் மேற்பட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய வானதிசீனிவாசன் இறுதியில் விருப்ப மனுக்களை பெறும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அப்போது, கூட்டத்தில் சலசலப்பு உண்டானது.

bjp

அங்கிருந்த மீனாட்சி என்ற பெண்ணை கட்சி நிர்வாகிகள் சரமாரியாக திட்டி உள்ளனர். அத்துடன் அந்த பெண்ணின் மீது தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட தலைவர் பலராமன் இந்த விஷயத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட பெண்ணை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

ஆனாலும் மறுபடியும் அந்த பெண் மண்டபத்திற்குள் வந்தார். மீண்டும் கட்சி நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், நிர்வாகிகள் ஏன் அந்த பெண்ணை தாக்கினார்கள் என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இறுதியில் செய்தியாளர்களிடம் வானதி நிகழ்ச்சி குறித்து பேட்டி தந்தார்.

Vanathi

அப்போது, நடந்த சம்பவம் குறித்து வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, சம்பவம் தொடர்பாக மாவட்ட தலைவரிடம் விசாரித்து அறிக்கை தருமாறு கேட்டுள்ளதாகவும், அந்த பெண்ணிற்கு ஆறுதல் தெரிவித்து புகாரை மாவட்ட தலைவரிடம் கொடுக்குமாறு தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கைகலப்பும், ரகளையும் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கட்சி வட்டாரத்தில் ஏற்படுத்தி வருகிறது.

From around the web