எல்லோரும் பாதுகாப்பா இருக்கீங்களா...? கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
CM-Stalin

ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது; கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 18 வயதினர் உட்பட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில்  அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளதாவது,

மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை வழிகாட்டு நெறிமுறை.

கொரோனாவால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதனை இப்படி நீட்டித்துக்கொண்டிருக்க முடியாது. ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நான் ஒப்படைத்துள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையே தேவை. தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக செயல்படும்.

கொரோனாவை வெல்வோம்! நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்!

என கூறியுள்ளார்.


 

From around the web