கூடுதலாக 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்தது..!

 
கூடுதலாக 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்தது..!

மத்திய தொகுப்பில் இருந்து அனுப்பப்பட்ட 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு இன்று வந்து சேர்ந்துள்ளன.

தமிழகத்திற்கு கூடுதலாக 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள், மத்திய அரசு தொகுப்பில் இருந்து இன்று வந்து சேர்ந்துள்ளன. புனே சீரம் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள், விமானம் மூலமாக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளன.

அந்த 3 லட்சம் தடுப்பு மருந்துகளும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பு மருந்துகளை மாவட்ட வாரியாக விநியோகிக்கும் பணி இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கிறது.

ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி நிறுவனங்களிடம் மாநில அரசுகளே நேரடியாக தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்து கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஒன்றரை கோடி தடுப்பூசிகளை பெற தமிழக அரசு சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஏற்கனவே தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து 3 லட்சம் தடுப்பு மருந்துகள் தற்போது அனுப்பபட்டுள்ளன. இதுவரை தமிழகத்திற்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் மொத்தமாக 67 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ்கள் வந்து சேர்ந்துள்ளன.

இந்நிலையில் இன்று மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு இதுவரை வந்திருக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 70 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ்களாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 56.6 லட்சமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் தற்பொது 10 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web