அம்மா மினி கிளினிக்.. ஒரு வருடத்திற்கு மட்டும்தான் என்று தொடங்கப்பட்டிருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
MAS

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மெய்நிகர் திரை மூலம் கண்காணிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் கொரோனா பரவல் காரணமாக சித்தா மருத்துவ மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர், “சென்னை மாநகராட்சியில் 22 பரிசோதனை மையங்கள் திறந்துவைக்கப்பட இருக்கிறது. 15 முதல் 17 வயதிற்குள்ளானோருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை தமிழ்நாடு முதல்வர் நேற்று துவக்கி வைத்துள்ளார்.

நாடு முழுவதும் இந்தப் பணி துவங்கினாலும் முதல்வரே நேரடியாக வந்து 15 முதல் 17 வயதிற்குள்ளானோருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை துவக்கிவைத்தது தமிழ்நாட்டில் மட்டும்தான்.

அம்மா மினி கிளினிக்கள் தொடங்கப்படும் பொழுதே ஒரு வருடத்திற்கு மட்டும்தான் எனத் தற்காலிக அமைப்பாகவே தொடங்கப்பட்டிருக்கிறது. தொடங்கப்பட்டபொழுது 1,820 மருத்துவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டனர். அந்த கிளினிக்கிற்கு செவிலியர்கள்கூட நியமனம் செய்யப்படவில்லை.

அதேபோல் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடத்தில் பெயிண்ட் அடித்து ஒரு போர்டை வைத்து திறந்து வைத்தார்கள். இந்த மருத்துவர்கள் எல்லாம் ஏற்கனவே கொரோனா 2-வது அலையில் பயன்படுத்தப்பட்டார்கள். இப்பொழுதுகூட அவர்கள் மார்ச் 31-ம் தேதி வரை பணிநீட்டிப்பு செய்யப்பட்டு கொரோனா தடுப்பு பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

From around the web