நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!

 
Rajendra-Balaji

ஜாமீன் வழங்ப்பட்டதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று வெளியே வந்தார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 5-ந் தேதி கர்நாடகாவில் வைத்து ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி என்.வி. ரமனா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.  

மேலும், ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலைய எல்லையைத் தாண்டி பயணிக்கக்கூடாது, விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளையும் உச்சநீதிமன்றம் விதித்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை அவரது வக்கீல் ஒப்படைத்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை வெளியே வந்தார்.

From around the web