அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்..!

 
Supreme-Court-give-Condition-Bail-to-Former-Minister

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் ரத்தானதை தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

அவரை தீவிரமாக தேடி வந்த போலீசார் கடந்த 5-ந் தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைது செய்தனர். பின்னர் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 10-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரியும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

அதேவேளை, தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக 32 பேர் புகார் அளித்துள்ளனர். இதில், அரசியல் காரணங்கள் இல்லை எனவும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூ. 3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அவர் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. மேலும், அவர் மீது நடைபெற்று வரும் விசாரணைக்கு ராஜேந்திர பாலாஜி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து உச்சநீதிமன்றம் அவருக்கு 4 வாரகால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து, இந்த வழக்கை 3 வாரங்களுக்கு உச்சநீதிமன்றதம் ஒத்தி வைத்துள்ளது.

நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதையடுத்து திருச்சி சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web