100 சவரன் தங்கம், 5 கிலோ வெள்ளினு அள்ளி அள்ளி கொடுத்தோமே.. இளம்பெண் தற்கொலை: பெற்றோர் கதறல்

 
Tripur

திருமணமாகி ஒரே ஆண்டில் வரதட்சணை கொடுமை விவகாரத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, இவரது மூத்த மகள் இலக்கியா (வயது 27). கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சரவணன், ஜெயந்தி தம்பதியின் மகனான ராம் பிரகாஷ் என்பவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது.

திருமணத்தின் போது வரதட்சணையாக மாப்பிள்ளைக்கு 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி மற்றும் ஸ்கோடா கார் வழங்கியுள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் இலக்கியாவின் மாமனார் சரவணன் மற்றும் மாமியார் ஜெயந்தி தொடர்ந்து பலமுறை நகை மற்றும் பணத்தை கேட்டுப் பெற்றுள்ளதாக தெரிகிறது.

அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்வதால் மன வேதனை அடைந்த இலக்கியா இது குறித்து பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இதனிடையே, கணவர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததால் கடந்த மார்ச் மாதம் இலக்கியா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து ஒரு மாதம் கழித்து ராம்பிரகாஷ் இலக்கியாவை போனில் அழைத்து சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து ராம்பிரகாஷ் குடும்பத்தினர் மீண்டும் 5 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்காக முதல்கட்டமாக ஒரு லட்ச ரூபாயை இலக்கியாவின் பெற்றோர் ராம்பிரகாஷ் குடும்பத்திற்கு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென ராம்பிரகாஷ் வீட்டார், இலக்கியாவின் வீட்டாருக்கு செல்போனுக்கு அழைத்து இலக்கியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உடனே வரும்படி தெரிவித்துள்ளனர். இதையடுத்து இலக்கியாவின் பெற்றோர் கோவை வந்து பார்த்தபோது கழுத்து இறுகி இருந்த நிலையில் இலக்கியா சடலமாக இருந்துள்ளார்.

இதை கண்டு கதறி அழுத இலக்கியாவின் பெற்றோர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த ராமநாதபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்த சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து இலக்கியாவின் உறவினர்கள் கூறும்போது, திருமணத்துக்கு முன்பே வரதட்சணை கேட்டு பெற்று இலக்கியாவை திருமணம் செய்து கொண்டார்கள், பெண் நல்ல படியாக வாழவேண்டும் என்பதற்காக கேட்கும் பொருட்களையெல்லாம் கொடுத்துள்ளோம். இருந்தாலும் எங்கள் வீட்டு பெண்ணை தொடர்ந்து ராம் பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்தனர்.

இலக்கியா உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதாகவும் இதனால் ராம்பிரகாஷ் குடும்பத்தார் வரதட்சனைக்காக அவர் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து, வரதட்சணை கொடுமை செய்த காரணத்தால் மன உளைச்சலில் அவர் தூக்கிட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் சந்தேகிக்கின்றனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web