‘கடந்தகால தமிழகத்தைப் படிப்போம்; எதிர்கால தமிழகத்தைப் படைப்போம்’ – சிகாகோவில் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு!

சிகாகோ: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, ஃபெட்னா தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கம் பொன்விழா ஆகிய முப்பெரும் தமிழ் விழா சிகாகோ ஷாம்பார்க் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. மரபுக் கலைகள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் அரங்கத்தில் ஆரவாரமான கொண்டாட்டமாக விழா நடைபெறுகிறது. பாரம்பரிய உடையுடன் வருகை தந்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களால் அரங்கம் உள்ள பகுதி முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள் பங்கேற்று உரையாற்றி வருகிறார்கள். எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன்
 

‘கடந்தகால தமிழகத்தைப் படிப்போம்; எதிர்கால தமிழகத்தைப் படைப்போம்’ – சிகாகோவில் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு!சிகாகோ: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, ஃபெட்னா தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கம் பொன்விழா ஆகிய முப்பெரும் தமிழ் விழா சிகாகோ ஷாம்பார்க் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது.

மரபுக் கலைகள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் அரங்கத்தில் ஆரவாரமான கொண்டாட்டமாக விழா நடைபெறுகிறது. பாரம்பரிய உடையுடன் வருகை தந்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களால் அரங்கம் உள்ள பகுதி முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள் பங்கேற்று உரையாற்றி வருகிறார்கள். எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன் பேசும் போது தமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப் படவேண்டும் என்று வலியுறுத்தினார். அவருடைய உரையின் விவரம் வருமாறு,

“உலகம் முழுவதும் 6 ஆயிரம் மொழிகள் இருப்பதாக ஐக்கியநாடுகள் சபை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் மக்கள் அதிமாக பேசும் மொழிகள் என்ற கணக்கெடுப்பில் நம் தமிழ் மொழி 17வது இடத்தில் உள்ளது. இது நம் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.

நமது மொழி செவ்வியல் மொழி, செம்மொழி என்றெல்லாம் அழைக்கப்படுவதற்கு முதல் காரணம் உலகமெல்லாம் இருக்கின்ற தமிழ்ச் சான்றோர்கள் தான் முக்கிய காரணம். புறநானூறு, அகநானூறு, சங்கத்தமிழ், திருக்குறள், தொல்காப்பியம் என எந்த பண்டைய நூல்களாக இருந்தாலும் ஓலைச்சுவடிகளில் தான் எழுதப்பட்டது.

நம்மிடம் திருவள்ளுவர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள் இல்லை. ஏனென்றால் ஓலைச்சுவடிகளின் காலம் 300 ஆண்டுகள் வரையில் தான். அதுவும் வெப்ப சூழல் உள்ள இந்தியா போன்ற நாடுகளில் 300- 350 ஆண்டுகளுக்கு மேல் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பாக இருக்காது. அதை மறுபடியும் எழுதி வைத்திருப்பார்கள். அடுத்தடுத்த தலைமுறைகளில் எழுதி வைத்து பாதுகாத்தார்களே, அப்படி பாதுகாத்தவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.

அப்படிப் பாதுகாக்கப் பட்டவைகளை, உ.வே.சாமிநாத அய்யர், இலங்கை தாமோதரப் பிள்ளை போன்ற எத்தனையோ அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் தனிமனிதர்களாக இருந்தாலும் ஒரு பல்கலைக் கழகம் அல்லது அரசாங்கம் செய்யாத காரியத்தை செய்து முடித்தார்கள். அப்படி கண்டெடுக்கப்பட்டதால் தான் தமிழ் மொழி செம்மொழி என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் நான் சொல்லக் கடமைப் பட்டுள்ளது, “கடந்த கால தமிழகத்தைப் படிப்போம் எதிர்கால தமிழகத்தைப் படைப்போம்,” என்பது தான். எதிர்காலத் தமிழகத்தைப் படைப்பதற்காகத் தான் கடந்த கால தமிழகத்தைப் படிக்கிறோம். இங்கே அமர்ந்துள்ள ஆய்வாளர் பேராசிரியர் கே.ராஜனும் இரண்டு ஆய்வாளர்களும் இணைந்து Catalogs of Archaeological Sites in Tamil Nadu என்னும் புத்தகத்தை 2009ம் ஆண்டு வெளியிட்டார்கள்.

அந்தப் புத்தகத்தில் தமிழ் நாட்டில் எங்கெங்கல்லாம் தொல்லியல் ஆய்வு செய்யலாம் என்பதை ஆய்வு செய்து பட்டியலிட்டு கூறியுள்ளார்கள். இரண்டாயிரம் இடங்களில் தொல்லியல் ஆய்வு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது .அவற்றுள் அதிகபட்சமாக 100 இடங்களில், அதாவது 4 சதவீத இடங்களில் மட்டுமே, ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன் மூலமாகவே இவ்வளவு பெருமைகளை கொண்டு வந்துள்ளார்கள். 100 சதவீதத்தையும் ஆய்வு செய்தால் என்னென்ன தெரியவரும் என்று எண்ணிப்பாருங்கள்.

இரண்டாயிரது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரி, ஆப்கானிஸ்தான், கிரேக்கம் ஆகிய நாடுகளுடன் தமிழர்களின் வணிக உறவு தெரியவந்துள்ளது. ரோமாபுரி நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிடப்பட்ட நாணயங்கள் உலகம் பூராவும் கிடைத்தவைகளில் 80 சதவீதம் தமிழ்நாட்டின் கொடுமணல் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ரோமாபுரி நாட்டின் புத்தம் புதிய நாணயங்கள் அங்கே கிடைத்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்களின் வணிகத் தொடர்பு அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகள் பொறித்த பானை ஓடுகளின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் கொடுமணலில் கிடைத்துள்ளது. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் கல்வெட்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 60 ஆயிரம் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 30 ஆயிரம், கர்நாடகாவில் 30 ஆயிரம் என மூன்று மாநிலங்களில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

இவற்றில் 45 ஆயிரம் கல்வெட்டுகள் மட்டுமே படிக்கப்பட்டுள்ளன என்பது வேதனைக்குரியதாகும். தமிழ்நாட்டில் 30 ஆயிரம் கல்வெட்டுகள் கேட்பாரற்று கிடக்கிறது. கொடுமணலில் 30 ஆண்டுகளாக 50 ஏக்கரில் ஒரே ஒரு சதவீதம் தான் ஆய்வு செய்துள்ளார்கள். உலகம் பூராவும் இந்த தகவலைக் கொண்டு சேர்த்து ஆராய்ச்சியை உருவாக்கி ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவருவோம், எழுச்சிமிகு தமிழகத்தைப் படைப்போம்,” என்று ஸ்டாலின் குணசேகரன் உரையாற்றினார்.

விழாவில் இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழர்கள் மத்தியில் ஆர்வமும், மகிழ்ச்சியும், ஆய்வு மேற்கொள்ளப் படாத தகவல் கேட்டு ஆழ்ந்த வருத்தமும் ஏற்பட்டது. ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள இங்குள்ள தமிழர்கள் எப்படி உதவலாம் என்ற கருத்துப் பரிமாற்றத்தையும் கேட்க முடிந்தது.

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு அரங்கத்திலிருந்து ராஜா ராமதாஸ்

From around the web