யாஷ் தாக்கூர் அபார பந்துவீச்சு.. குஜராத் அணியை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
17-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்களிலும், அடுத்ததாக களமிறங்கிய படிக்கல் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கேப்டன் கே.எல். ராகுலுடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இதனால் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது.
இவர்களில் கே.எல்.ராகுல் 33 ரன்களிலும், ஸ்டோய்னிஸ் 58 ரன்களிலும் ஆட்டமிழக்க, இறுதி கட்டத்தில் பூரன் அதிரடியாக விளையாடி அணி கௌரமான நிலையை எட்ட உதவினார். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக நல்கண்டே மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் சாய் சுதர்ஷன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். நிதானமாக ஆடத் தொடங்கிய இந்த ஜோடியில் சுப்மன் கில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் 1 ரன்னில் வெளியேறனார்.
மறுமுனையில் ரன் சேர்க்க போராடிய சாய் சுதர்ஷன் 31 ரன்களும், ஷரத் 2 ரன்னும், தர்ஷன் நல்கண்டே 12 ரன்களும், விஜய் சங்கர் 17 ரன்களும், ரஷித் கான் (0) ரன் ஏதும் எடுக்காமலும், உமேஷ் யாதவ் 2 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறுதிவரை போராடிய ராகுல் தேவாட்டியா 30 ரன்களும், நூர் அகமது 4 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
இறுதியில் குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும் ரவி பிஷ்னோய் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.