மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன்.. வெளியான போட்டி அட்டவணை.. முதல் போட்டி எப்போது..?

 
WPL

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் வரும் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

பிசிசிஐ சாா்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த ஆண்டு பெண்கள் ஐபிஎல் எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. முதலாவது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

WPL

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் வரும் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், இந்த முறை தொடர் பெங்களூரு மற்றும் டெல்லியில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சீசனை போல இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


போட்டி அட்டவணைப்படி தொடர் பிப்ரவரி 23-ம் தேதி முதல் மார்ச் 17ம் தேதி வரை தொடர் நடைபெறுகிறது. மார்ச் 15-ம் தேதி எலிமினேட்டர் ஆட்டமும், மார்ச் 17-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி ஆட்டங்கள் டெல்லியில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

From around the web