அடுத்த ஆண்டு விளையாடுவீங்களா..? தல தோனி பதில்

 
Dhoni

சென்னை அணியுடன் எப்போதும் இணைந்து இருப்பேன் என சென்னை அணி கேப்டன் தோனி கூறி உள்ளார்.

16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து நேற்று (மே 23) பிளே-ஆஃப் சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 157 ரன்களில் சுருண்டது.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. 120 பந்துகளில் 173 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ். எனினும், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தோற்றது. 10வது முறையாக சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது.

CSK

இந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டியில் அகமதாபாத்தில் விளையாடுகிறது. இதனால் இதுதான் சென்னையில் கடைசி? அடுத்த ஆண்டு நீங்கள் சென்னையில் வந்து விளையாடுவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து நான் டிசம்பரில் தான் முடிவெடுப்பேன். இன்னும் 8 முதல் 9 மாதங்கள் இருக்கிறது. அதனால் இப்போது சொல்ல முடியாது. டிசம்பர் மாதம் மினி ஏலம் நடக்கும். அப்போது இருக்கும் உடல் தகுதியை வைத்து அடுத்த சீசனில் விளையாடலாமா? வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுப்பேன்.

அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் வீடுகளில் நான் அதிக நேரம் இருப்பதில்லை. குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிப்பதில்லை. நான் ஜனவரி மாதம் இறுதியில் வீட்டை விட்டு வெளியேறினேன். பல்வேறு பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து நான் அணியோடு பயிற்சி செய்து வருகிறேன்.

Dhoni

இதையெல்லாம் வைத்து தான் அடுத்த சீசன் குறித்து முடிவெடுக்க வேண்டும். இப்போது எதற்கு அந்த தலைவலியை எடுத்துக் கொள்ள வேண்டும். நான் சென்னை அணியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். சிஎஸ்கேவுக்காக நான் எப்போதும் இருப்பேன். அது பிளேயிங் லெவனில் இருந்தாலும், அதற்கு வெளியே இருந்தாலும் சரி என்று தோனி கூறினார்.இதன் மூலம் அடுத்த சீசனில் தோனி விளையாடுவது மிகவும் வாய்ப்பு குறைவு என தெரிகிறது. ஜூலை மாதம் வந்தால் தோனிக்கு 42 வயதாகிவிடும் என்பதால் இது கடைசி சீசன் ஆக இருக்கலாம் என்று தெரிகிறது.

From around the web