வில் ஜேக்ஸ் அதிரடி சதம்.. குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெருங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சஹா களமிறங்கினர்.
தொடக்கத்தில் சஹா 5 ரன்களிலும், கில் 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சாய் சுதர்சன், ஷாருக்கான் இருவரும் இனணந்து சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். பெங்களூரு அணியின் பந்துவீச்சை இருவரும் பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்சன், ஷாருக்கான் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
தொடர்ந்து ஷாருக்கான் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த பிறகும் சாய் சுதர்சன் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 201 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடுகிறது.
தொடக்க வீரர்களாக டு பிளசிஸ், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் டு பிளசிஸ் ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வில் ஜேக்ஸ் களமிறங்கினார். விராட் கோலி - வில் ஜேக்ஸ் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். குஜராத் அணியின் பந்துவீச்சை இருவரும் துவம்சம் செய்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய விராட் கோலி, வில் ஜேக்ஸ் இருவரும் அரைசதம் அடித்தனர்.
அரைசதம் கடந்த பிறகு ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ் தொடர்ந்து சிக்சர்களை பறக்க விட்டார். அவர் 41 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.இறுதியில் 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அபாரவெற்றி பெற்றது.