ரோகித் - தோனி யாருக்கு வெற்றி..? சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை!

 
CSK

16வது ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - மும்பை அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றது.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 49வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

நடப்பு தொடரில் இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானதால் புள்ளியை பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று.

Dhoni-resigns-as-Chennai-Super-Kings-captain

சென்னை அணியில் டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்கிறார். ஆனால் துஷர் தேஷ்பாண்டே, பதிரானா ஆகியோர் கணிசமாக விக்கெட் வீழ்த்தினாலும் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவாக அமைந்துள்ளது. ஆடுகளத்தன்மை மற்றும் பேட்ஸ்மேனின் மனநிலையை உணர்ந்து அதற்கு ஏற்ப பந்து வீசும்படி கேப்டன் டோனி அறிவுரை வழங்கி இருக்கிறார்.

சென்னை அணி ஏற்கனவே மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் சேப்பாக்கம் மைதானம் சென்னை அணியின் கோட்டையாக வர்ணிக்கப்படுகிறது. இந்த சீசனில் இங்கு சென்னை அணி ஆடியுள்ள 4 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றது. மற்ற 2 ஆட்டத்திலும் நெருங்கி வந்து மயிரிழையில் தோல்வி அடைந்தது. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கக்கூடும்.

MI

இந்த சீசனில் தொடக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி சரியான நேரத்தில் எழுச்சி கண்டிருக்கிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றி, 4-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டங்களில் 200-க்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்து (சேசிங்) சாதனை படைத்தது. இவ்விரு ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக அரைசதம் விளாசினார். டிம் டேவிட், திலக் வர்மா, இஷான் கிஷனும் நல்ல நிலையில் உள்ளனர். 

ஏற்கனவே சென்னையிடம் தோல்வி அடைந்திருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க மும்பை வீரர்கள் வரிந்துகட்டுவார்கள் என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்து விட்டதால் ஸ்டேடியமும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அதிரப்போகிறது. ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகள் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் மும்பையும், 15-ல் சென்னையும் வெற்றி கண்டுள்ளன.

From around the web