விராட் கோலி அதிரடி.. நியூசிலாந்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கான்வே, வில் யங்க் களமிறங்கினர். கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான வில் யங்க் 27 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து 8.1 ஓவரில் 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனை தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்சேல் இருவரும் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடி வந்த இருவரும், அவ்வப்போது பவுண்டரிகளையும் விரட்டினர். இதனால், நியூசிலாந்து அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரிந்தது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ரச்சின் ரவீந்திரா, 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த டேரில் மிட்சேல், சதம் அடித்து அசத்தினார்.
அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. கேப்டன் டாம் லாதம் (5), பிலிப்ஸ் (23), சாப்மேன் (6), சாண்ட்னர் (1), ஹென்றி (0), அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். சிறப்பாக விளையாடிவந்த டேரில் மிட்சேல், 127 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 130 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைபற்றினர்.
இதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சுப்மன் கில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இந்தியா 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தபோது மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. திடீரென மைதானத்தை சுற்றிலும் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக போதிய வெளிச்சமின்மை சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் பனிமூட்டம் விலகியதை அடுத்து, ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். ஐயர் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து விராட் கோலி - ராகுல் கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்களில் ராகுல் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார்.
கோலியுடன் இணைந்த ஜடேஜா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டபோது கோலி சதம் அடிப்பதற்கும் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கோலி சிக்ஸ் அடிக்க முயற்சித்தபோது அது கேட்ச்சானது. இதனால், 95 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜடேஜா 39 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அத்துடன், உலகக்கோப்பை தொடரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.