இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மல்யுத்தத்தில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோகியுள்ளது.
2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நேற்று களம் புகுந்தார். தனது முதல் சுற்றில், முந்தைய ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரும், 4 முறை உலக சாம்பியன் மற்றும் ஆசிய விளையாட்டு சாம்பியனுமான ஜப்பானின் யு சுசாகியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் தொடர்ச்சியாக 82 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போட்ட யு சுசாகியின் பேராதிக்கத்துக்கு வினேஷ் முற்றுப்புள்ளி வைத்தார்.
இதைத் தொடர்ந்து கால்இறுதியில் உக்ரைனின் ஒக்சானா லிவாச்சை 7-5 என்ற புள்ளி கணக்கில் சாய்த்தார். நேற்று இரவில் அரங்கேறிய அரைஇறுதியில் வினேஷ் போகத், கியூபாவின் லோபஸ் யுஸ்னேலிஸ் குஸ்மேனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் பெற்றார்.
இந்த நிலையில், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோ 100 கிராம் (அதாவது கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதாக தகவல்) இருப்பதாக தெரியவந்துள்ளது. 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதிப்போட்டியில் விளையாடவிருந்த வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மற்றொரு வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த வீராங்கனைக்கு தங்கம் வழங்கப்படுகிறது. ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோகியுள்ளது.
Indian Wrestler Vinesh Phogat disqualified from the Women’s Wrestling 50kg for being overweight.
— ANI (@ANI) August 7, 2024
It is with regret that the Indian contingent shares news of the disqualification of Vinesh Phogat from the Women’s Wrestling 50kg class. Despite the best efforts by the team through… pic.twitter.com/xYrhzA1A2U
மல்யுத்த போட்டிகளை பொறுத்தவரை, ஒரு வீரர் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன் அவரது உடல் எடை பரிசோதிக்கப்படும். அதில், வீரர் கலந்துகொள்ளும் குறிப்பிட்ட எடைப்பிரிவுக்குள் அவரது உடல் எடை இருக்க வேண்டும். எடைப்பிரிவுக்கு கூடுதலாக ஒரு கிராம் எடை அதிகரித்து இருந்தாலும், கூடுதல் எடை உள்ளதாக அந்த வீரர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பது விதிமுறையாகும். கடந்த ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய வினேஷ் போகத், இம்முறை 50 கிலோ எடைப்பிரிவில் விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.