டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்.. இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

 
SA vs SL

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றிபெற்றது.

9-வது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் இன்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் பதும் நிசாங்கா 3 ரன்னிலும், குசல் மெண்டிஸ் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய இலங்கை வீரர்கள் தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் காமிந்து மெண்டிஸ் 11 ரன், வனிந்து ஹசரங்கா 0 ரன், சதீரா சமரவிக்ரமா 0 ரன், சரித் அசலங்கா 6 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

SA vs SL

இதனால் இலங்கை அணி 45 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து அனுபவ வீரர்களாக ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷனகா 9 ரன்னிலும், மேத்யூஸ் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து மகேஷ் தீக்சனா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 19 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்டுகளும், மகராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் குயிண்டன் டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஹென்ரிக்ஸ் 4 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மார்க்ரம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக டி காக்குடன், ஸ்டெப்ஸ் ஜோடி சேர்ந்தார்.

SA vs SL

நிதானமாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் டி காக் 20 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து ஸ்டெப்ஸ் 13 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக கிளாசெனுடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இறுதியில் கிளாசென் 19 (22) ரன்களும், டேவிட் மில்லர் 6 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், நுவன் துஷாரா மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.

From around the web