டி20 உலக கோப்பை தொடர்.. கடைசி ஓவரில் தென் ஆப்பிரக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
9-வது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் கோலி களமிறங்கினர்.
இதில் முதல் ஓவரிலேயே 15 ரன்கள் அடித்து அதிரடியாக தொடங்கிய இந்தியாவுக்கு, 2-வது ஓவரை வீசிய கேஷவ் மகராஜா இரட்டை செக் வைத்தார். அந்த ஓவரில் ரோகித் 9 ரன்களிலும், பண்ட் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். அவரை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்து தடுமாறியது.
பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். விராட் கோலி ஒருபுறம் நிதானமாக விளையாட மறுமுனையில் அக்சர் அதிரடியாக விளையாடினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்சர் படேர் துரதிர்ஷ்டவசமாக 47 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
நிலைத்து விளையாடிய விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். ஷிவம் துபே தனது பங்குக்கு 27 ரன்கள் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நோர்ஜே மற்றும் கேஷவ் மகராஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹெண்ட்ரிக்ஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கேப்டன் மார்க்ரனும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கத்திலேயே முக்கிய இரு விக்கெட்டுகளை இழந்த நிலையில், டி காக்குடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார்.
ஸ்டப்ஸ் தன் பங்குக்கு 31 ரன்களும், டி காக் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கிளாசன் அதிரடியில் மிரட்டினார். குறிப்பாக அக்சர் படேல் வீசிய 15-வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட மொத்தம் 24 ரன்களை திரட்டினார். தொடர்ந்து அதிரடி காட்டிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தாலும், தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்தார்.
ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு சாதகமாகவே ஆட்டம் இருந்தது. 18-வது ஓவரை வீச வந்த பும்ரா 2 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து மார்கோ யான்சென் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
The celebrations have begun in Barbados 🥳
— BCCI (@BCCI) June 29, 2024
A round of applause for the ICC Men's T20 World Cup 2024 winning side - Team INDIA 🇮🇳🙌#T20WorldCup | #TeamIndia | #SAvIND pic.twitter.com/OElawo7Xha
19-வது ஓவரை வீச வந்த அர்ஸ்தீப் சிங், வெறும் 4 ரன்களை மட்டும் கொடுத்து இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டினார். இதனால் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை ஹர்தி பாண்ட்யா வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர், சிக்சருக்கு தூக்கி அடிக்க முயன்றார். அப்போது எல்லைக்கோடு அருகே நின்ற சூர்யகுமார் யாதவ், சிக்சருக்கு சென்ற பந்தை சூப்பர் மேன் போல பிடித்து அசத்தினார். இதனால் அதிரடி ஆட்டக்காரரான மில்லர் அவுட்டானார்.
மில்லர் ஆட்டமிழந்ததும், இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அடுத்த 5 பந்துகளில் தென் ஆப்பிரிக்க அணியால் 8 ரன்களே எடுக்க முடிந்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், பும்ரா, அர்ஸ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.