ஸ்டோய்னிஸ் அதிரடி சதம்.. கடைசி ஓவரில் சென்னை அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி

 
LSG vs CSK

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி , சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் ரகானே ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ரகானே 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த டேரில் மிட்சேல் 11 ரன்களும் , ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

பின்னர் ஷிவம் துபே களமிறங்கினார். மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து ஆடினார். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் அரைசதம் அடித்தார். ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் இணைந்து அதிரடி காட்டினார். அரைசதம் கடந்த பிறகு பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட ருதுராஜ் கெய்க்வாட் 56 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் ஷிவம் துபே 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. 

LSG vs CSK

இதனைத் தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் சார்பில் குயிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் டி காக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 16 ரன்களும், அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டோய்னிஸ் தனது அரை சதத்தை பதிவு செய்தார். 

அடுத்ததாக மார்கஸ் ஸ்டோய்னிசுடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன் குவிக்கத் தொடங்கிய இந்த ஜோடியில் நிகோலஸ் பூரன் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்டோய்னிஸ் 56 பந்துகளில் ஐபிஎல் தொடரின் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். 

LSG vs CSK

முடிவில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 124 ரன்களும், தீபக் ஹூடா 17 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பதிரானா 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், ரகுமான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்றது. 

From around the web