ஸ்டோய்னிஸ் அரைசதம்.. மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அசத்தல் வெற்றி

 
LSG vs MI

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சூர்யகுமார் யாதவ் (10), திலக் வர்மா (7), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 36 ரன்களை எடுத்து திணறியது. அப்போது நேகல் வதேரா மற்றும் இஷான் கிஷன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

LSG vs MI

இவர்களின் நிதான ஆட்டத்தால் மும்பை அணி ஓரளவு கவுரவமான ஸ்கோரை எட்டியது. நிதானமாக விளையாடிய வதேரா 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 36 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் டிம் டேவிட் சில பவுண்டரிகள் விளாச மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144  ரன்கள் சேர்த்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மோசின் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் இம்பேக்ட் வீரர் அர்ஷின் குல்கர்னி ஆகியோர் களம் இறங்கினர். இதில் குல்கர்னி 0 ரன்னிலும், ராகுல் 28 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தனர்.

LSG vs MI

இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் தீபக் ஹூடா 18 ரன்னிலும், ஸ்டோய்னிஸ் அரைசதம் அடித்த நிலையில் 62 ரன்னிலும் அவுட் ஆகினர்.  இதையடுத்து நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆஷ்டன் டர்னர் ஜோடி சேர்ந்தனர். இதில் டர்னர் 5 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய பதோனி 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 62 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

From around the web