உலகக்கோப்பை கிரிக்கெட் 2023: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி..!

 
SA vs AFG

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

SA vs AFG

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் களமிறங்கினர். இதில், குர்பாஸ், இப்ராஹிம் இருவரும் முறையே 25 ரன்கள் மற்றும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷா மற்றும் நூர் அஹமது தலா 26 ரன்கள் எடுத்தனர். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்களையும் இழந்து ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.

SA vs Afg

தொடக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி காக் சிறப்பாக விளையாடி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் டெம்பா பவுமா 23 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரசி வான்டர் டுசன் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பெலக்வாயோ 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் 47.3 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதையடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

From around the web