ஷமி, சிராஜ் அபார பந்துவீச்சு.. இலங்கையை வீழ்த்தி இமாலய வெற்றி பெற்ற இந்தியா!

 
Ind vs SL

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடுத்த பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

Ind vs SL

அதன் பின்னர் சுப்மன் கில்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளித்து அரைசதம் கடந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சுப்மன் கில், விராட் கோலி இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் முறையே 92 (11 பவுண்டரி, 2 சிக்சர்) மற்றும் 88 (11 பவுண்டரி) ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மறுபுறம் கே.எல்.ராகுல் 21 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் வெளியேறினார். சிக்சர் மழை பொழிந்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 82 (3 பவுண்டரி, 6 சிக்சர்) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 106 மீட்டர் தூரம் சிக்சர் அடித்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக தூர சிக்சரை பதிவு செய்தார். 

இலங்கை அணி சார்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளும் துஷ்மந்தா சமீரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

Ind vs SL

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா, கருணாரத்னே இருவரும் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி சார்பில் முஹமது ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

From around the web